மசினகுடியில்: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி - மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை


மசினகுடியில்: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி - மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 5:10 PM GMT)

மசினகுடியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். எனவே மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மசினகுடி, 


மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை வாங்க மசினகுடியில் 2 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. நெடுஞ்சாலையோரங்களில் செயல்பட்டு வந்த 2 கடைகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதில் ஒரு கடை ஊட்டி சாலையில் உள்ள பட்டுப்பூச்சி பண்ணையின் பின்புற பகுதிக்கும், மற்றொன்று மாயார் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கும் மாற்றபட்டது.

இதில் பட்டுப்பூச்சி பண்ணை அருகில் செயல்பட்டு வரும் மதுபான கடை வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அப்பகுதியில் அடிக்கடி சுற்றி திரிகின்றன. மேலும் அந்த கடைக்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதியும் கிடையாது. இதனால் அந்த மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மசினகுடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

பொக்காபுரத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 49), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மதுபானம் வாங்க அந்த கடைக்கு சென்று உள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று காலை வரை மாதேவன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இந்த நிலையில் பட்டுப்பூச்சி பண்ணையின் பின்புற பகுதியில் ஒருவர் காட்டு யானை தாக்கி இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மசினகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாதேவன் என்பது தெரியவந்தது.

மது போதையில் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் மதுபான கடை அருகில் மாதேவன் படுத்து உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவரை தந்தத்தால் குத்தி கொன்றது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட மசினகுடி போலீசார் பிரேத பிரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மசினகுடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story