விக்கிரவாண்டி அருகே: கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விக்கிரவாண்டி அருகே: கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 5:48 PM GMT)

விக்கிரவாண்டி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் காளியம்மன், துர்க்கையம்மன், அம்மச்சார் அம்மன், சின்னமாரியம்மன் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவிலில் பூஜைகள் முடிந்ததும் பூசாரியான அதே கிராமத்தை சேர்ந்த கோபி (வயது 30), கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோபி, கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் மற்றும் கோவில் சன்னதியில் உள்ள அனைத்து அம்மன் கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகளும், இதுதவிர 2 பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் பக்தர்கள் காணிக்கை பணம் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார், கோவிலுக்கு விரைந்து வந்து உடைக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் ராக்கி கொள்ளை நடந்த கோவிலில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஆசூர் சாலையில் காலனி பக்கமாக சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story