புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நாகை வருகை


புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நாகை வருகை
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:20 PM GMT)

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(புதன்கிழமை) நாகைக்கு வருகிறார்.

நாகப்பட்டினம்,

நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் கரையை கடந்த ‘கஜா’ புயல் கடுமையாக தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கிறார்கள். மின் வினியோகம் இதுவரை சீராகாததால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(புதன்கிழமை) அதிகாலை 4.45 மணி அளவில் நாகைக்கு ரெயிலில் வருகிறார்.

முன்னதாக அவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகைக்கு புறப்பட்டார். நாகையில் காலை 9.30 மணி முதல் கவர்னர் நிவாரண பணிகளை பார்வையிட உள்ளார்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காரில் செல்லும் கவர்னர், மதியம் 1.30 மணி வரை புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். அதன் பின்னர் மதியம் 2.30 மணிக்கு திருவாரூருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் புயல் பாதிப்புகளை கவர்னர் பார்வையிட உள்ளார்.

திருவாரூரில் இரவு 8.30 மணி வரை பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிய உள்ளார்.

திருவாரூரில் கவர்னர் நாளை(வியாழக்கிழமை) காலையிலும் நிவாரண பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். மதியம் 1.30 மணி வரை திருவாரூரில் கவர்னரின் ஆய்வு பணி நடக்கிறது. பின்னர் 3.15 மணி அளவில் கவர்னர் தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். தஞ்சை மாவட்ட பகுதிகளிலும் புயல் பாதித்த இடங்களை கவர்னர் பார்வையிட உள்ளார். 

Next Story