பல்லாவரம், குரோம்பேட்டையில் அடுத்தடுத்து வழிப்பறி தாய், மகள் உள்பட 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு


பல்லாவரம், குரோம்பேட்டையில் அடுத்தடுத்து வழிப்பறி தாய், மகள் உள்பட 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:45 AM IST (Updated: 21 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம், குரோம்பேட்டையில் அடுத்தடுத்து தாய், மகள் உள்பட 3 பெண்களிடம் சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 40). இவருடைய மகள் சீதா (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் உள்ள துணிக்கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

பின்னர் அவர்கள் குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக கோவிலம்பாக்கத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மஞ்சுளா மற்றும் சீதா கழுத்தில் அணிந்திருந்த 2 தங்க சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

5 பவுன் தங்க நகையை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றது தொடர்பாக பல்லாவரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், பம்மல் எல்.ஐ.சி. காலனி 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமி (42) உடன் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

குரோம்பேட்டை அருகே வந்தபோது, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியை பறித்தனர்.

அப்போது மகாலட்சுமி நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி சிக்னல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட அதே நபர்கள்தான் குரோம்பேட்டை அருகிலும் வழிப்பறியில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்து உள்ளது.

வழிப்பறி நடந்த 2 இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், மர்ம நபர்கள் 2 பேரையும் வலை வீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
1 More update

Next Story