ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தம்பதி தவறவிட்ட 32 பவுன் நகை மீட்டு ஒப்படைப்பு ரெயில்வே போலீசார் நடவடிக்கை


ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தம்பதி தவறவிட்ட 32 பவுன் நகை மீட்டு ஒப்படைப்பு ரெயில்வே போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-21T01:02:26+05:30)

ரெயிலில் தம்பதி தவறவிட்ட 32 பவுன் நகையை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தாம்பரம்,

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

இந்த ரெயில் திருச்சி செல்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கோவிந்தன் (வயது 73) தனது மனைவி பஞ்சவர்ணம் (67) உடன் வந்தார்.

அவர்கள் ரெயிலில் ஏறியபோது கூட்ட நெரிசல் காணப்பட்டதாக தெரிகிறது. இதனால் முதலில் ஏறிய ரெயில் பெட்டியில் இருந்து மற்றொரு ரெயில் பெட்டிக்கு மாறினார்.

அப்போது அவர்கள் தாங்கள் வைத்திருந்த சூட்கேசை முதலில் ஏறிய ரெயில் பெட்டியில் மறந்து வைத்து விட்டனர். அந்த சூட்கேசில் 32 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் இருந்தன.

ரெயில் சிறிது தூரம் சென்றபிறகு தான் அவர்கள் சூட்கேசை தவறவிட்டதை அறிந்து தேட தொடங்கினர். இதற்கிடையில் கிண்டி ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்த போது அதே ரெயிலில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வைரவன், ரெயில் பெட்டியில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்ததை பார்த்தார்.

உடனே அவர் இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ரெயில், தாம்பரம் ரெயில் நிலையம் சென்றதும் வைரவன் அந்த சூட்கேசை தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைசெல்வியிடம் ஒப்படைத்தார்.

ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்னர் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் கோவிந்தனிடம் பயணி தவறவிட்ட சூட்கேஸ் தாம்பரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கோவிந்தன் சூட்கேசை தவற விட்ட பயணி யார் என்பதை விசாரித்து, அவர்களிடம் தகவலை தெரிவித்தார்.

அதற்குள் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்துவிட்டது. அதன் பிறகு கோவிந்தன், பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் செங்கல்பட்டில் இறங்கி ரெயிலில் தாம்பரம் வந்தனர்.

பின்னர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு வந்த கோவிந்தனிடம் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் இருந்த சூட்கேஸை ரெயில்வே இன்ஸ்பெக்டர் கலைசெல்வி ஒப்படைத்தார்.

நகைகள் திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர் ரெயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

Next Story