மத்திய அரசு உடனடியாக முதல் கட்ட நிதியை வழங்க வேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி


மத்திய அரசு உடனடியாக முதல் கட்ட நிதியை வழங்க வேண்டும் ஜி.கே. வாசன் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 8:11 PM GMT)

மத்திய அரசு உடனடியாக முதல் கட்ட நிதியை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாறு காணாத அளவிற்கு மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது கஜா புயல். மத்திய அரசு உடனடியாக ஒரு குழுவை அனுப்பி முதல் கட்ட நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் பாதிப்பு பார்க்க வந்தது தாமதம் இருப்பினும் இன்றைக்கு வந்துவிட்டு இரண்டு பகுதிகளை பார்வையிட்டு மற்ற பகுதிகளை வானிலை காரணமாக பார்க்காமல் திரும்பி சென்றுள்ளது ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

களத்தில் இறங்கி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு நேரடியாக சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை பொய்த்துவிடும். பாதிப்பு என்பது அதிக அளவில் இருப்பதால், அரசியலுக்கு இது சவாலாகத்தான் இருக்கும். ஆனால் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை அரசு விரைந்து செய்து அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டும். மின் தடையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் காசோலையாக வழங்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அரியலூரில் வருகிற 25-ந் தேதி நடக்க இருந்தது. அது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஜி.கே.வாசன் பார்வையிட்டார்.

Next Story