3 பெண்களிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையன் கைது


3 பெண்களிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 10:21 PM GMT)

3 பெண்களிடம் நகை பறித்த வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்து 18 பவுன் நகையை மீட்டார்கள்.

ஊஞ்சலூர்,

கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று கொடுமுடி காவிரி ஆற்று பழைய படித்துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். அதனால் அவரையும், மோட்டார்சைக்கிளையும் சோதனை செய்தார்கள்.

அப்போது அவரிடம் ஒரு கத்தியும், 3 தங்க தாலிக்கொடிகளும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பிடிப்பட்டவரை கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பிடிப்பட்டவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகநாதன் (வயது 37) என்பது தெரியவந்தது.

மேலும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஊஞ்சலூர் கரட்டூரில் நடந்து வந்துகொண்டு இருந்த சம்பூர்ணம் என்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும், கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறையை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும், கொளத்துப்பாளையத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த தீபிகா (27) என்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும் பறித்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஜெகனை கைது செய்து, அவரிடம் இருந்து 18 பவுன் நகையையும் மீட்டார்கள்.



Next Story