ஹாட்லி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சாலை, சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிகள் அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஹாட்லி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சாலை, சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிகள் அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:22 PM GMT (Updated: 20 Nov 2018 10:22 PM GMT)

ஹாட்லி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சாலைகள், சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு பணிகளை அன்னதாணி எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

ஹலகூர், 

ஹாட்லி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சாலைகள், சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு பணிகளை அன்னதாணி எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

சீரமைப்பு பணிகள்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட ஹாட்லி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடகலபுரா, நஞ்சேகவுடனதொட்டி, அட்டுவனஹள்ளி, ஹாலஹள்ளி, துருகனூரு, கம்மாசாகரா, லிங்கனபுராதொட்டி, மேகலுபுரா, குனசுபுரா ஆகிய கிராமங்களில் சாலைகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கின. இப்பணிகளுக்கான தொடக்க விழா ஹாட்லி கிராமத்தில் உள்ள சமுதாய பவனில் நேற்று நடந்தது.

விழாவில் அன்னதாணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் பயன்பெறுவார்கள்

ஹாட்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சாலைகள், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று என்னிடம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அதை நான் முதல்-மந்திரி குமாரசாமியிடம் கூறினேன். அதன்பேரில் அவர் கிராம விகாச திட்டத்தின் கீழ் ஹாட்லி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சாலைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க நிதி ஒதுக்கினார். அந்த நிதியின் மூலம் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் ஆகாசபுரா மற்றும் ஹாட்லி கிராமத்தில் 2 ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. அந்த ஏரிகளை தூர்வாரி, நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் அப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்

மலவள்ளி தொகுதியில் என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும், எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-மந்திரி குமாரசாமியும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறார்கள். தற்போது கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் விவசாய பெண் ஒருவரை முதல்-மந்திரி குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சரியல்ல. நானும் விவசாயியின் மகன் தான். எனக்கும் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்னதாணி எம்.எல்.ஏ. கூறினார்.

எம்.எல்.ஏ.விடம் மனு

இதையடுத்து அன்னதாணி எம்.எல்.ஏ.விடம், ஹாட்லி கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக்கோரி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ரவி மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அன்னதாணி எம்.எல்.ஏ. விரைவில் ஹாட்லி கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்த விழாவில் கிராம பஞ்சாயத்து தலைவர் வீராசாமி, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி லதா மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story