போலீஸ் என்று ஏமாற்றி நகையை அபேஸ் செய்யும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை


போலீஸ் என்று ஏமாற்றி நகையை அபேஸ் செய்யும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 10:29 PM GMT)

போலீஸ் என்று ஏமாற்றி நகையை அபேஸ் செய்யும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 3-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி பி.லீலா (46). இவர் கடந்த 14-ந் தேதி வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் ஆசாமிகள் 2 பேர் போலீசார் என்று ஏமாற்றி லீலா அணிந்திருந்த 7½ பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றார்கள்.

இதுகுறித்து லீலா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பேரில், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, லீலாவிடம் இருந்து தங்க நகையை பறித்துச்சென்ற வழிப்பறி திருடர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும், சம்பவம் நடந்தபோது அங்குள்ள ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் மூலம் துப்பு கிடைத்து உள்ளது. எனவே வழிப்பறி கொள்ளையர்களுக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.

இந்தநிலையில் டிப்-டாப் ஆசாமிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது. இவர்களில் ஒருவன் பார்க்க போலீஸ் போன்றே இருப்பான். உடன் இன்னொருவனும், அவர்களுக்கு துணையாக வேறு சிலரும் உள்ளனர். இவர்கள் தனியாக வரும் பெண்களை கண்காணித்து நைசாக பேச்சுக்கொடுப்பார்கள். தாங்கள் போலீசார் என்று அறிமுகப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கையில் உள்ள பைகளில் பாதுகாப்பாக வைக்கும்படி கூறுவார்கள். அப்படி அவர்கள் பேசுவதை கேட்டு ஏமாந்து நகைகளை கழற்றும்போது பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிடுவார்கள். அப்போது பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் போலீஸ் பாணியில் மிரட்டுவார்கள். அப்போது அவர்களுக்கு உதவியாக அங்கு ஒருவர் பின் ஒருவராக வந்து நகைகளை கழற்றி பாதுகாப்பாக வைப்பது போன்று செய்வார்கள். இதை பார்க்கும் பெண்கள் உண்மை என்று ஏமாந்து நகைகளை கழற்றும்போது, மின்னல்வேகத்தில் அதை பிடுங்கிவிட்டு, கையில் தயாராக வைத்திருக்கும் காகிதத்தை அவர்களின் பைகளில் வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விடுவார்கள்.

நகையை பறிகொடுத்த பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்ளும் முன்பு வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து மறைந்து விடுவதால் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே இந்த நூதன திருட்டு குறித்து தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இதுபோல் பிற மாநில ஏமாற்று கும்பல் பல்வேறு இடங்களிலும் நடமாடி, கொள்ளையடித்துவிட்டு தப்பி விடுகிறார்கள். எனவே தனியாக நடந்து செல்லும் பெண்கள் தங்க நகைகளை பாதுகாப்பாக அணிந்து செல்லவும், அறிமுகம் இல்லாத நபர்கள் தங்க நகைகளை கழற்றும்படி கூறினால் அதை ஏற்க வேண்டாம். உடனடியாக பாதுகாப்பான பகுதிகள், ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு சென்று விட வேண்டும். மேலும், அருகில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தமாக பேசியோ, கூக்குரலிட்டோ உதவிக்கு அழைக்க வேண்டும். சீருடை இல்லாத நிலையில் போலீஸ் என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.



Next Story