மாணவி பலாத்கார வழக்கு: போலீஸ் காவலில் வாலிபரிடம் தீவிர விசாரணை
மாணவி பலாத்கார வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் சிட்லிங்கை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந்தேதி உயிரிழந்தார். இதில் தொடர்புடைய சதீஷ்(வயது 22) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மற்றொரு வாலிபர் ரமேஷ்(22) சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். சதீசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ரமேஷை கடந்த 20-ந்தேதி போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணையை தொடங்கினார்கள். பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்ற சிட்லிங் கிராமத்திற்கு ரமேஷை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதேபோல் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற போலீசார் பல்வேறு விவரங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதற்கான தடயங்கள் மற்றும் ஆவணங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் கூறுகையில், மாணவி இறந்த பிறகு சிலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story