காஞ்சீபுரம் அருகே கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை


காஞ்சீபுரம் அருகே கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 7:04 PM GMT)

காஞ்சீபுரம் அருகே கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 21). வேலை இல்லாமல் உள்ளார். மேலும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் அதே வேளியூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் (50) என்பவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். வெளியே வந்த வேலாயுதத்தின் மனைவி மலர், இந்த நேரத்தில் ஏன் நீ கதவை தட்டினாய் என்று கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் அங்கிருந்த கடப்பாரையால் மலரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டதும் வெளியே வந்த வேலாயுதம், கோவிந்தராஜிடம் சென்று ஏன் வீட்டுக்கு இந்த நேரத்திற்கு வந்து கதவை தட்டினாய் என்று கேட்டார். இதில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் மூண்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் கடப்பாரையால் கோவிந்தராஜின் தலையில் தாக்கினார். இதில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த காயங்களுடன் மலர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் போலீசாருடன் வேளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை கடப்பாரையால் கொலை செய்த வேலாயுதத்தை தேடி வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story