‘கஜா’ புயல் பாதிப்பை மத்தியக்குழு பார்வையிட வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி


‘கஜா’ புயல் பாதிப்பை மத்தியக்குழு பார்வையிட வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-22T00:34:14+05:30)

மதுராந்தகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 5–ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்று விழா மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

மதுராந்தகம்,

ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்கப்படவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றது மக்களுக்கு பயன் அளிக்கவில்லை.

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு நிதியுதவி பெற்று தர வேண்டும். ‘கஜா’ புயல் பாதிப்பை பார்வையிட பா.ஜ.க. அரசு ஒரு மத்தியக்குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, முறையான நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சியை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


Next Story