கிராம மக்கள் போராட்டம் எதிரொலி மதுபானம் விற்றவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மதுபானம் விற்றவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெமினி (வயது54). இவர் ஆந்திராவில் இருந்து மது பானங்களை கடத்தி வந்து கிராமத்தில் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மதுபானத்தை விற்ற ஜெமினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.