ஏர்வாடி மீனவர்கள் கடற்கரையில் போராட்டம்


ஏர்வாடி மீனவர்கள் கடற்கரையில் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி கடற்கரையில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் வெளியூர் விசைப்படகு மீனவர்களை கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழக்கரை,

மண்டபம் முதல் ஏர்வாடி வரையிலான கடல் பகுதியில் விசைப்படகுகள் அரசின் சட்ட விதிகளுக்கு மாறாக கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்க தவறிய மீன்வள துறையை கண்டித்தும், கடந்த 4 வருடங்களாக மாதந்தோறும் நடத்தப்படும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வலியுறுத்தியும் ஏர்வாடி ஊராட்சி மற்றும் சின்ன ஏர்வாடி, சடைமுனியன் வலசை, மொட்டையன்வலசை, வேளாண் துறை, கல்பார், ஏராந்துறை, மற்றும் கீழக்கரை உள்ளிட்ட 15 கிராம நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் ஏர்வாடி கடற்கரையில் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஏர்வாடி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கிருஷ்ணன் மற்றும் 15 கிராம மீனவ தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி நாட்டுப்படகு மீனவர் சங்க செயலாளர் முத்துநாதன் வரவேற்றார்.

இதில் கடல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி பேசும்போது, 1983–ம் ஆண்டு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டவிதிகளுக்கு மாறாக விசைப்படகுகள் கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவு பகுதியில் மீன் பிடிப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்வாடி ஊராட்சி நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்வாடி கடல்பகுதியில் மீன்வளத்துறையின் சார்பில் படகுகளில் ரோந்து வரவேண்டும். கடல் வளத்தையும், மீன் வளத்தையும் சட்டவிரோத இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் விசைப்படகுகளை அரசு பறிமுதல் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று பேசினார். இதுதொடர்பாக மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாவட்ட அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story