திருமங்கலத்தில் கெட்டுப்போன 500 கிலோ இறைச்சிகள் பறிமுதல்


திருமங்கலத்தில் கெட்டுப்போன 500 கிலோ இறைச்சிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:21 PM GMT)

திருமங்கலத்தில் கடைகளில் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பதற்காக வைத்திருந்த 500 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருமங்கலம்,

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை நாய் இறைச்சி என்று கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நகராட்சி கமி‌ஷனர் ஜெயராமராஜா, சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நகராட்சிக்கு உட்பட்ட 28 இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருசில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கடைகளில் இருந்த கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனை கிருமி நாசினி போட்டு நகராட்சி குப்பைக்கிடங்கில் புதைத்தனர். மேலும் இதுபோன்று இனிமேல் இறைச்சி கடைக்காரர்கள் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி வதைக்கூடங்களில் வதைக்கப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறித்தினர்.


Next Story