விவசாயியிடம் ஜேப்படி: வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி - பொதுமக்கள் ஆவேசம்


விவசாயியிடம் ஜேப்படி: வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி - பொதுமக்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 22 Nov 2018 3:30 AM IST (Updated: 22 Nov 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயியிடம் ஜேப்படி செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத் தனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 40), விவசாயி. இவர் நேற்று காலை சங்கராபுரம் செல்வதற்காக மூக்கனூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஏழுமலையின் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாயை ஜேப்படி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த ஏழுமலை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்தார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வாலிபரை அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ரங்கப்பனூர் மேற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் முனுசாமி(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து முனுசாமியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story