நெல்லையில் துணிகரம்: மளிகை கடையை உடைத்து ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லையில் துணிகரம்: மளிகை கடையை உடைத்து ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Nov 2018 4:45 AM IST (Updated: 22 Nov 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மளிகை கடையை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை வண்ணார்பேட்டை சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 49). இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நள்ளிரவில் மர்ம நபர்கள், அந்தோணிராஜ் கடையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 100 அரிசி மூட்டைகள் மற்றும் எண்ணெய் கேன்கள், பிஸ்கட்டுகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர். மேலும் கடையில் இருந்த பொருட்களை சிந்தி, சிதறிப்போட்டு விட்டும் சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் கடைக்கு வந்த அந்தோணிராஜ், கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட்டு போன அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும். மேலும் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரத்து 500-ஐயும் மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தோணிராஜ், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் புளுட்டோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.


இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் வந்து பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வண்ணார்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்த பலசரக்கு கடை, கே.டி.சி.நகரில் கணேஷ் என்பவர் நடத்தி வந்த பலசரக்கு கடையையும் உடைத்து அங்கிருந்த ரூ.2ஆயிரத்து 500 மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். கடை முன்பு நின்ற மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்று விட்டனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story