கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி பொருட்கள் அனுப்பப்பட்டன - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு,  ஈரோடு மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி பொருட்கள் அனுப்பப்பட்டன - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 21 Nov 2018 10:16 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

ஈரோடு,

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், ராமநாதபுரம், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இழப்புகள் அந்த பகுதி மக்களை நிலைகுலைய வைத்து இருக்கிறது. இன்னும் பாதிப்பு அடைந்த பல கிராமங்கள் தனித்தீவுபோல் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல கிராமங்களில் ஆதரவு தெரிவிக்கக்கூட யாரும் செல்லாத நிலையில் கண்ணீரில் தவித்துக்கொண்டு இருக்கும் மக்களும் உள்ளார்கள். மின்சாரம், உணவு, குடிதண்ணீர் என்று எதுவும் முழுமையாக இல்லாத நிலையில் கடுமையான போராட்ட வாழ்வினை மேற்கொண்டு வரும் மக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கடந்த 19-ந் தேதி ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோளின் படி பல்வேறு தனியார் அமைப்புகளும், பொதுமக்களும் இந்த நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது கட்டமாக ரூ.57 லட்சம் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் முதல் கட்டமாக அரிசி, குழந்தைகளுக்கான பால்பவுடர், பிஸ்கெட், ரொட்டி, தண்ணீர், நாப்கின், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் பொருட்கள் சேகரித்து ஆர்வத்தோடு வழங்கினார்கள்.

பெருந்துறை தொகுதி சார்பில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேகரித்து கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். இதுபோல் ஒளிரும் ஈரோடு அமைப்பு, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம், எம்.சி.ஆர். நிறுவனம், சிறகுகள் அமைப்பு ஆகியவை சார்பில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் 2 நாட்களில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்ட மக்கள் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்பினர், தன்னார்வ தொண்டர்களும் பொருட்கள் சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக அனுப்பி வருகிறார்கள். நேற்றும் சுமார் 3 டன் அளவுக்கு அரிசி சேகரிக்கப்பட்டது. அவை மாலையில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



Next Story