படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்திற்கு இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்திற்கு இழப்பீடு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2018 11:00 PM GMT (Updated: 22 Nov 2018 7:13 PM GMT)

படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்திற்கு இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசிய விவரம் பின்வருமாறு:-

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்:-

கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டர் வீதம் தடுப்பணை கட்டி மழை காலங்களில் வீணாக செல்லும் நீரை சேமித்து வைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, மக்காச்சோளத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள விவசாயிகள் மாட்டு வண்டியில் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடியாக பஸ் இயக்க வேன்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் பெற்று தர ஏற்பாடு செய்ய வேன்டும். கூடுதலாக தண்ணீர் வந்தால் மட்டுமே கடை மடை விவசாயிகள் பயன்பெற முடியும். விக்கிரமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தில் இருந்து முத்துவாஞ்சேரி கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாய சங்க செயலர் விசுவநாதன்:-

அரியலூர் மாவட்டத்தில் படை புழு தாக்குதலால் மக்காச்சோளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2, 3 முறை மருந்து அடித்தாலும் படை புழு சாவதில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை போன்று 11 பொதுத்துறை வங்கியில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சிமெண்டு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் மேககூட்டங்கள் கலைந்து செல்கின்றன. எனவே வரும் காலங்களில் மழை மறைவு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஆகிவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே புகையை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்றார்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து:-

மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவினர்கள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று முறையாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். அரசு மானியத்தில் விவசாயி குழுவினர்கள் அமைக்கப்பட்டுள்ள மாவு மில், வாடகை எந்திர மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு குறைவான விலைக்கு மாவு, எண்ணெய் ஆட்டிக்கொடுக்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் பழைய விலைக்கே மாட்டு தீவனம் விற்க வேண்டும் என்றார்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலர் ராஜேந்திரன்:-

சமீபத்தில் ஏற்பட்ட புயலால் அரியலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 10,000 ஏக்கர் கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சி தடைபட்டு, மகசூல் இழப்பு ஏற்பட்டு கரும்புகள் சாய்ந்து கிடப்பதால் அறுவடைசெய்வதற்கு அதிக கூலி வழங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து விவசாயிகள் கொண்டு வந்த படை புழுவால் பாதிக்கப்பட்ட மக்காசோள பயிர்களை கலெக்டரிடம் காட்டி இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) லலிதா, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story