கரந்தமலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


கரந்தமலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கரந்தமலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தம், 

நத்தம் பகுதி பெரும்பாலும் மலைகளும், குன்றுகளும், ஆறுகளும், சிற்றோடைகளும் உள்ளடக்கியதாகும். இதில் நத்தம் வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் பருவமழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதுதவிர கொரசின்னம்பட்டி ஆறு, கரந்தமலை ஆறு, முளையூர் மேல்மலை ஆறு மற்றும் சிற்றோடைகளில் இருந்து தண்ணீர் ஆற்றில் கலக்கிறது.

இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும். இந்தநிலையில் ‘கஜா’ புயலின் காரணமாக பெய்த பலத்த மழையால் கடந்த சில நாட்களாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீரை சேமிக்க அணை இல்லாததால் வீணாக கடலில் கலக்கிறது.

இதனால் மழை பெய்தும் நத்தம் வட்டார விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பயன்பாடும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே இந்த பகுதியில் மழைநீரை தேக்க கரந்தமலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். ஆனால் இதுவரை அணை கட்டுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து நத்தம் தொகுதி தென்னை மற்றும் பழப்பண்ணையின் விவசாய சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறும்போது, ‘கரந்தமலை மற்றும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் திருமணிமுத்தாற்றின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. எனவே மழைநீரை சேமித்து கரந்தமலை அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு சரி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு அணை கட்டப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம், கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன் மூலம் விவசாயமும் செழிப்படையும்’ என்றார்.

Next Story