பெருமாநல்லூர் பகுதியில்: தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது


பெருமாநல்லூர் பகுதியில்: தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 12:04 AM GMT)

பெருமாநல்லூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாநல்லூர்,

பெருமாநல்லூரை அடுத்த காளிபாளையம் கிழக்கு சீராம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 20-ந்தேதி மதியம் இவரது வீட்டில் இருந்து 5 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து அவர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து நகை திருடியவர்களை தேடி வந்தனர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நில புரோக்கர் சண்முகநாதன், சம்பவத்தன்று அப்பகுதியில் நின்றிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்றிருந்ததாகவும், அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளர் என்று கூறியதாகவும், அந்த நபர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை குறித்து வைத்து இருந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அவர் கொடுத்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜதுரையிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று அவருடைய தம்பி தேவக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்(35), தனது கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், முட்டியங்கிணறு பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்துக்கு இடமாக பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது பிடிபட்ட 3 பேரும் வெங்கடாசலம் வீட்டில் திருடியவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் தேவக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், தேவிபட்டினத்தை சேர்ந்த கணேசன்(43), மதுரை மேலூரை சேர்ந்த பார்த்திபன்(26) ஆகியோர் என்பதும், கோவை சிறையில் இருந்த போது நட்பு ஏற்பட்டு பிச்சம்பாளையத்தில் பிரிண்டிங் பட்டறையில் வேலை செய்வதாக நடித்து திருட்டு தொழிலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் தட்டாங்குட்டை பகுதியில் வீடு புகுந்து 7 பவுன் நகையை திருடி அவினாசியை சேர்ந்த முத்துராமலிங்கத்திடம் கொடுத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தனர். கணேசன் மீது ராமநாதபுரம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு செலவுக்காக திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கைதான 3 பேரையும் பெருமாநல்லூர் போலீசார் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story