அண்ணனை கொலை செய்ய முயன்றதற்கு பழிக்குப்பழி: வாலிபரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினர் 3 பேர் கைது
அண்ணனை கொலை செய்ய முயன்றதற்கு பழிக்குப்பழியாக கோவை கோர்ட்டு முன்பு வாலிபரை ஓட,ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சுங்கம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சூர்யா (22). இவர் கடந்த 26.9.2018 அன்று கோவை ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவருடைய நண்பர்கள் தினேஷ், ஜிதேந்திரன், அருண்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான சூர்யா உள்பட 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தினேஷ், ஜிதேந்திரன், அருண்குமார் ஆகியோர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.
கடந்த 16–ந் தேதி சூர்யா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் தினமும் கோவை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று காலை 9.50 மணியளவில் சூர்யா கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு கோர்ட்டு திறப்பதற்காக காத்து நின்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் அங்கு வந்தனர். அவர்களில் 2 பேர் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூர்யாவை நோக்கி வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே தப்பி ஓடித்தொடங்கினார். உடனே அந்த 2 பேரும் ஓட ஓட விரட்டி சென்று சூர்யாவின் வயிற்றில் கத்தியால் குத்தினர். அதன் பிறகும் சூர்யா ஓட முயன்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து விரட்டி சென்று அரிவாளால் சூர்யாவை சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த சூர்யா கோர்ட்டு முன் இருக்கும் பழமுதிர் நிலையத்துக்குள் புகுந்தார். அவரை பின்தொடர்ந்து கையில் அரிவாளுடன் 2 பேர் விரட்டி வருவதை பார்த்து, கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையில் அரிவாளுடன் வந்த 2 பேரும் பொதுமக்களிடம் சிக்கி விடுவோமோ என்று பயந்து கோர்ட்டுக்கு வெளியே நின்ற தங்களின் நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சூர்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபரை இது தொடர்பாக போலீசார், பழமுதிர் நிலையத்தில் உள்ள காண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சூர்யாவை அரிவாளால் வெட்டிய நபர்கள் கார்த்திக்கின் தம்பியான ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த தீபக், அவருடைய நண்பர் சஞ்சய், சுஜித் என்பது தெரியவந்தது.
உடனே கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், தப்பிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து கைதான தீபக் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘என்னு டைய மனைவியின் முன் என்னை சூர்யா அவமானப்படுத்தினார். இதை அறிந்த எனது அண்ணன் கார்த்திக் ஆத்திரம் அடைந்து சூர்யாவை தாக்கினார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக என்னுடைய அண்ணன் கார்த்திக்கை, சூர்யா கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். சூர்யாவின் அட்டகாசம் தொடர்ந்ததால் அவரை தீர்த்து கட்டுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொல்ல முயன்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கைதான 3 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். கோவை கோர்ட்டு முன்பு ஓடஓட வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.