தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்தி ஏமாந்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு
தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்தி ஏமாந்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
சிவகங்கை,
கல்லல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் கல்லல் அணைத்திடல் கிராமத்தை சேர்ந்த ஜெயமேரி மற்றும் ஜாக்குலின்சகாயராணி உள்பட ஏராளமானவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– எங்கள் கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் பாக்கியமேரி.
இவர் கடந்த 2012–ம் வருடம் கிராமத்தில் உள்ளவர்களிடம் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையில் பணம் செலுத்தும்படியும், மாதம் ரூ.ஆயிரம் வீதம் 5 வருடம் பணம் செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ.85 ஆயிரம் தருவதாக கூறினார்.
மேலும் இந்த நிதி நிறுவனத்தின் கிளை காரைக்குடியில் செயல்படுவதாகவும் கூறினார். இதை நம்பி எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 35 பேர் மாதந்தோறும் பணத்தை 5 வருடம் கட்டி வந்தோம். ஆனால் அவர் கூறியபடி 5 வருடம் முடிந்தும் செலுத்திய பணத்தை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்ட போது, பல்வேறு காரணங்கள் கூறி வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எங்களை அவர் ஏமாற்றி வருகிறார். எனவே நாங்கள் தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்தி ஏமாந்த பணத்தை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.