4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது; மாநகராட்சி கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்
4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது என்று பெத்தானியாபுரம் பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
மதுரை,
மதுரை மாநகராட்சி மண்டலம்–1க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பெத்தானியாபுரம், மல்லிகை தெரு ஆகிய பகுதிகளில் வீடு,வீடாக சென்று குடிநீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் டெங்கு கொசுக்கள் புழு உற்பத்தி இருக்கிறதா என பார்வையிட்டார்.
அப்போது அங்குள்ள பொதுமக்கள், மாநகராட்சி சார்பாக 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடுவதாக சொல்கிறீர்கள். ஆனால் எங்கள் பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. எனவே தான் தண்ணீரை அதிக அளவில் பிடித்து சேமித்து வைத்து இருக்கிறோம் என்றனர். இதைகேட்ட கமிஷனர், 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அங்குள்ள சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி கடையினை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவனியாபுரம் வாய்க்காலில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டார். மேலும் வாய்க்காலில் குப்பைகள் கொட்டினால், அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் வாய்க்காலை சுற்றியுள்ள இருபுறமும் இரும்பு வேலி அமைக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கே.டி.கே.தங்கமணி நகர் சாலையில் கமிஷனர் ஆய்வு செய்தபோது, கட்டுமான பொருட்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் கொட்டி வைத்திருந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பாக்கியநாதபுரம் பாரதியார் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.