குடியாத்தம் அருகே சுடுகாட்டை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு
குடியாத்தம் அருகே சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார் மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, கல்வி உதவித்தொகை, பொதுநல மனுக்கள் உள்ளிட்ட 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கலெக்டர் ராமன், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
குடியாத்தம் தாலுகா ரேணுகாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் கிராமத்தில் 600–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ரேணுகாபுரம் மற்றும் சுண்ணாம்பு கொட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தினர் சுடுகாட்டை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்த லதா என்பவரின் தலைமையில் 10–க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், ‘‘சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் என்.எஸ்.டி.சி. என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து தொழிற்கடன் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பெற்று தருகிறேன் என்று கூறினார். இதனை நம்பிய நாங்கள் அவரிடம் பல லட்சம் கொடுத்தோம்.
ஆனால் இதுவரை அவர் கடன் பெற்றுத்தரவில்லை. அவர் மோசடி செய்து விட்டார். எனவே நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
சென்னையில் நடந்த மாநில அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி மற்றும் ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வெங்கடாசலம், வேலுச்சாமி ஆகியோர் கலெக்டர் ராமனிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.