கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி வகுப்பு முடிந்த பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கருப்பசாமி (வயது 23) மாணவியை பின்தொடர்ந்து சென்றார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டிற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து மாணவி தப்பிச்சென்றார். பின்னர் இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து கருப்பசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் நேற்று தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட கருப்பசாமி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண தொகையாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் துறைகள் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story