குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கைகாட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கைகாட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டி ஊராட்சியில் மளுகபட்டி உள்ளது. இங்கு அதிக குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு கடந்த 12 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி மின்சாரமும் இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்க முடியாமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமச்சாலையில் கல்லாமேடு என்ற இடத்தில் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காலிக்குடங்களை வரிசையாக சாலையில் வைத்து மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் வளநாடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வருவாய் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்படி மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே கிராமத்திற்கு சென்று குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story