களியக்காவிளை அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது மாணவர்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்


களியக்காவிளை அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது மாணவர்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதே சமயத்தில், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல், மாணவர்களை குறி வைத்து கஞ்சா சப்ளை செய்து வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சா கும்பலை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் அய்யர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்த போது, அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் போலீசாருக்கு அந்த கும்பலின் மீது சந்தேகம் வலுத்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2½ கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கஞ்சாவுடன் சிக்கியவர்கள் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 52), வியன்னூர் ஆன்றோ ஜெபின்(20), அருமனை பீட்டர் ஷாஜன்(20), செங்கோடி அபினாஷ் (19), திருவரம்பு ஈர்பின் தோம் (20) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2½ கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story