அமெரிக்க படைப்புழுவால் பாதிப்பு: மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு - தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்


அமெரிக்க படைப்புழுவால் பாதிப்பு: மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு - தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் அமெரிக்க படைப்புழுவால் பாதிப்பு அடைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விருதுநகர்,                                     

விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர் சாகுபடி மாவட்டம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய மகசூல் கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் அமெரிக்க படைப்புழுவால் பெரிதும் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டனர். இக்குழுவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, விவசாய சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழுவினர் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் தாலுகாக்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் இக்குழு தலைவர் லிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள சாகுபடிக்கு விவசாயிகள் அமெரிக்க நிறுவன விதைகளை பயன்படுத்தி உள்ளனர்.

இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர் அமெரிக்க படைப்புழுக்களால் பெரிதும் சேதம் அடைந்துள்ளது.

ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து மக்காச்சோள பயிரை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யும் நேரத்தில் புழுக்களின் படை எடுப்பால் பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விருதுநகர் அருகே உள்ள கவளூரில் மட்டும் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் படைப்புழுக்களால் சேதம் அடைந்துள்ளது. மேலும் காட்டுப்பன்றிகளும் மக்காச்சோள பயிரை உருக்குலைத்து விட்டன. இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story