தனித்தனி சம்பவத்தில்: வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை


தனித்தனி சம்பவத்தில்: வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே உள்ள நறுமணம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தமிழரசன் (வயது 25). இவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக தமிழரசன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து திடுக்கிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமிழரசனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தமிழரசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தமிழரசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழரசன் உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 55). இவர் நெய்வேலி வடக்குத்து அருகே அசோக்நகர் 1-ல் உள்ள தனது மகன் அருண்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்கியலட்சுமி விஷத்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாக்கியலட்சுமியின் மகள் தீபலட்சுமி(35), நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story