திருமணமான 1½ மாதத்தில் காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் கைது
திருமணமான 1½ மாதத்தில் காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர நாராயணன் (வயது 31). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அதே பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த சத்தியபாமா (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சத்தியபாமா வெளியில் செல்வதற்காக புறப்பட்டார். அப்போது கவுரி சங்கர நாராயணன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கவுரி சங்கர நாராயணன் தன்னுடைய மனைவியை அடித்து உதைத்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியை கட்டிலில் தள்ளி தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.
இதனால் வலிதாங்க முடியாமல் சத்தியபாமா அலறி துடித்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கவுரி சங்கர நாராயணனிடம் இருந்து சத்தியபாமாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சத்தியபாமாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரி சங்கர நாராயணனை கைது செய்தனர்.