நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு


நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Dec 2018 3:15 AM IST (Updated: 3 Dec 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை சரவணம்பட்டி ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

கோவை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஆனந்தகுமார், அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோர் என்னை அணுகி தாங்கள் ரத்தினபுரியில் அரசு பதிவு பெற்ற நிதி நிறுவனம் மற்றும் சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறோம். அதில் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 20 மாதத்துக்கு செலுத்தும் ரூ.5 லட்சம் சீட்டில் சேரலாம். ஏலச்சீட்டு என்பதால் மாதா மாதம் கழிவுத் தொகையும் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

அவர்கள் கூறியதை நம்பி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் செலுத்தினேன். அதன்பின்னர் தொடர்ந்து சீட்டு பணம் செலுத்தி வந்தேன். அவர்கள் அனுப்பும் ஆள் மூலமும் சீட்டு பணம் செலுத்தினேன்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நான் சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறினேன். அதன்படி சீட்டு பணம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் எனக்கு தரவேண்டும். ஆனால் அந்த பணத்தை கேட்ட போது ஆனந்தகுமார் தர மறுத்து விட்டார். பலமுறை பணத்தை கேட்டும் அவர் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் செலுத்திய சீட்டு பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஆனந்தகுமார், அவருடைய மனைவி மகேஸ்வரி, பங்குதாரர்கள் நாகலட்சுமி(49), லோகநாதன்(36) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story