அந்தியூர் இரட்டை கொலை: கோவிலில் சிதறல் தேங்காயை பொறுக்க விடாமல் தடுத்ததால் அடித்து கொன்றேன், கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


அந்தியூர் இரட்டை கொலை: கோவிலில் சிதறல் தேங்காயை பொறுக்க விடாமல் தடுத்ததால் அடித்து கொன்றேன், கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 Dec 2018 5:15 AM IST (Updated: 4 Dec 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் இரட்டை கொலையில் திடீர் திருப்பமாக கோவிலில் சிதறல் தேங்காயை பொறுக்க விடாமல் தடுத்ததால் அடித்து கொன்றேன் என கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கொன்னமரத்து அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் காவலாளியாக புதுப்பாளையம் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 50) என்பவர் வேலை செய்து வந்தார். கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50). போர்வை வியாபாரியான இவர் புதுப்பாளையம் பகுதியில் வியாபாரம் செய்துவிட்டு இரவு நேரத்தில் கொன்னமரத்து அய்யன் கோவிலில் உறங்கி செல்வது வழக்கம்.

கடந்த 1–ந் தேதி நள்ளிரவு இவர்கள் 2 பேரையும் கோவில் பகுதியில் வைத்து கட்டையால் அடித்து அந்தியூர் அருகே உள்ள ஆத்தம்பாளையத்தை சேர்ந்த நல்லசாமி (50) என்பவர் படுகொலை செய்தார். மேலும் ஆத்தம்பாளையத்துக்கு நடந்து சென்ற அவர் அந்த பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ.200 பணம் கேட்டு தகராறு செய்ததுடன், அவரையும் கத்தியால் குத்தினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:–

என்னுடைய பெயர் நல்லசாமி. கட்டிட தொழில் செய்து வருகிறேன். என்னுடைய மனைவி பெயர் ஜானா. எங்களுக்கு குழந்தை கிடையாது.

குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு என்னுடைய மனைவி ஜானா என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதனால் நான் மனமுடைந்தேன். நிம்மதி இல்லாமல் அலைந்த நான் அடிக்கடி கொன்னமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தேன்.

மேலும் அங்கு கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைப்பார்கள். அப்போது அவர்கள் கொடுக்கும் பொங்கலை வாங்கி தின்பேன். அதுமட்டுமின்றி இங்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக கோவில் முன்பு தேங்காய்கள் உடைப்பார்கள். அப்போது சிதறல் தேங்காய்களை நான் பொறுக்கி எடுத்தும் தின்பேன். இதை கோவிலில் காவலாளியாக வேலை செய்த வடிவேல் தடுத்தார். மேலும் சிதறல் தேங்காய்களை எடுக்கக்கூடாது என கண்டிக்கவும் செய்தார். இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த ஆத்திரம் காரணமாக வடிவேலை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி 1–ந் தேதி நள்ளிரவு கோவிலுக்கு சென்றேன். அப்போது கோவில் முன்பு 3 பேர் போர்வையால் மூடியபடி தூங்கி கொண்டிருந்தனர். உடனே நான் அங்கிருந்த கட்டையை எடுத்து தூங்கி கொண்டிருந்த ஒருவரை ஓங்கி அடித்தேன். அதில் அவர் சத்தம் போட்டு அலறியபடி அங்கிருந்து ஓடினார். அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வடிவேல், மூடியிருந்த போர்வையை விலக்கி என்னை பார்த்தார். உடனே ஆத்திரம் பொங்க அவரை கட்டையால் தாக்கினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் அவர் அருகில் படுத்திருந்த கந்தசாமி, நான் கொலை செய்ததை பார்த்துவிட்டார். எனவே இதை யாரிடமாவது அவர் சொல்லிவிடுவார் என நினைத்து கந்தசாமியையும் கட்டையால் அடித்து கொன்றேன்.

பின்னர் அங்கிருந்து ஆத்தம்பாளையத்தில் உள்ள என்னுடைய வீட்டுக்கு நடந்து சென்றேன். நடந்து செல்லும் வழியில் அதே சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் (45) என்பவர் அங்கு வந்தார். அவரிடம் பீடி வாங்கி குடித்தேன். மேலும் அங்கிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று எண்ணிய நான் குமாரிடம் ரூ.200 கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். எங்கு சென்றாலும் நமக்கு நிம்மதி கிடைக்கவில்லையே என்ற ஆத்திரம் ஏற்பட்டதுடன், என்னிடம் இருந்த கத்தியால் குமாரின் வயிற்றில் குத்தினேன். இதில் அலறி சத்தம் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவர்கள் என்னை பிடித்து போலீசில் கொடுத்துவிட்டனர்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நல்லசாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story