அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் படுகாயம்
அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் படுகாயமடைந்தார்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் படிக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 65). தொழிலாளி. இவர் சென்னம்பட்டி வனப்பகுதிக்கு தன்னுடைய மாடுகளை மேய்க்க நேற்று காலை ஓட்டி சென்றார். பின்னர் மாலையில் மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் ஆண் யானை நின்று கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால் அருகில் வந்ததும் முனியாண்டியை யானை தன்னுடைய துதிக்கையால் தூக்கி வீசியது.
மேலும் அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தகர டப்பாக்களில் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த முனியாண்டியை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.