போலீஸ் துணை சூப்பிரண்டு பணம் கேட்கும் ஆடியோ; குரல் பரிசோதனை ஆய்வுக்கு உத்தரவு


போலீஸ் துணை சூப்பிரண்டு பணம் கேட்கும் ஆடியோ; குரல் பரிசோதனை ஆய்வுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:06 AM IST (Updated: 4 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நிலமோசடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரூ.50 ஆயிரம் பணம் கேட்கும் ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும், குரல் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டிடம் நிலபுரோக்கர் ஜாபர் அலி என்பவர் வழக்கு விசாரணை ஒன்றில் சாதகமாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது தொடர்பாக பேசுவது போன்ற ஆடியோ வாட்ஸ்–அப்பில் வெளியானது. இந்த ஆடியோவின் இறுதியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு தான் மதுரையில் இருப்பதாகவும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்துவிடுமாறும் கேட்கிறார்.

இதற்கு புரோக்கர் ஜாபர் அலி 2 நாட்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கூற அதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு இப்படி சொன்னால் எப்படி என்று கூறுகிறார். இதனை கேட்ட புரோக்கர் தங்களின் சூழ்நிலை சரியில்லை என்றும் வேறு ஏற்பாடு செய்துகொண்டால் 2 நாட்களில் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கிறார். இதற்கு துணை சூப்பிரண்டு ஒத்துக்கொள்வது போன்று அந்த ஆடியோ பதிவாகி உள்ளது.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரூ.50 ஆயிரம் பணம் கேட்பது போன்ற ஆடியோ வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் கேட்டபோது, ஆடியோ வெளியான சம்பவம் தொடர்பாக தனி அதிகாரி மூலம் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. ஆடியோவில் உள்ளது அவருடைய குரல்தானா என்பது குறித்து குரல்பரிசோதணை ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story