ராமேசுவரம் கோவில் பகுதியில் ஊசி,பாசி விற்பனை செய்ய அனுமதிக்கக்கோரி நரிக்குறவ பெண்கள் மனு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஊசி,பாசி மணி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நரிக்குறவ பெண்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தினைகாத்தான்வயல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக நாங்கள் கிராமத்தில் இடம் ஒதுக்கி வழங்கி தற்போது அரசால் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த பணி முடிவடையாமல் உள்ளது. பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது.
இதனால் பழைய கட்டிடத்திலேயே மாணவ–மாணவிகள் ஆபத்தான நிலையில் கல்வி கற்று வருகின்றனர். இருக்க இடமின்றி மரத்தடியில் படித்து வருகின்றனர். இதுதவிர,தேவகோட்டையில் இருந்து திருவாடானைக்கு எங்கள் கிராமம் வழியாக செல்லும் பஸ் கடந்த பல நாட்களாக நிறுத்தப்பட்டுவிட்டது. ஆதங்குடி முதல் அல்லிகோட்டை வரை சாலை பணிக்காக தோண்டப்பட்டு பணி நடைபெறாமல் உள்ளதால் பஸ் வருவதில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவ–மாணவிகள் தங்கள் பகுதியில் இருந்து நடந்து தான் வரவேண்டி உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ராமேசுவரம் பகுதி நரிக்குறவ பெண்கள் ஏராளமானோர் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– நாங்கள் பிழைப்பிற்காக ஊர்தோறும் சென்று மக்கள் கூடும் இடங்களில் கடைவிரித்து ஊசி,மணி, பாசி விற்பனை செய்து வருகிறோம். தற்போது ராமேசுவரம் பகுதியில் குடில் அமைத்து ராமநாதசாமி கோவில் பகுதியில் கடைவிரித்து பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். அய்யப்பன்கோவில் சீசன் சமயம் என்பதால் 2 மாத காலத்திற்கு இந்த விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் போலீசார் எங்களை கடைவிரித்து விற்பனை செய்ய விடாமல் தடுத்து தொடர்ந்துதொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் நாங்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து சாப்பிடவே அவதிப்படுகிறோம். எனவே, எங்களின் நிலை உணர்ந்து கோவில் பகுதியில் கடை அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தேவிபட்டினம் படையாச்சிதெரு, கிறிஸ்தவதெரு, நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள உலகம்மன் கோவிலுக்கு சொந்தமான ஊருணிக்கரையில் உள்ள இடத்தை மோசடியாக பட்டா பெற்று ஆக்கிரமித்து வருகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். மோர்பண்ணை பகுதியை சேர்ந்த கிராம மீனவர் நிர்வாக குழுவினர் தங்கள் பகுதியில் கடற்கரையை ஒட்டி உள்ள மேடான புறம்போக்கு நிலத்தில் புயல் மற்றும் இயற்கை பேரிடர்காலங்களில் படகுகளுடன் தஞ்சமடைந்து வருவது வழக்கம். இந்த பகுதியில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
பெரியபட்டிணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை அகற்றி குப்பை தொட்டிகளை ஆங்காங்கே வைக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.