திருப்பாச்சேத்தி அருகே விபத்து வேன்–கார் மோதல்; தந்தை–மகன் பலி
வேன்– கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை–மகன் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்புவனம்,
மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், பரமக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று முன்தினம் காலையில் திருமணம் நடைபெற்றது.
பரமக்குடியில் இருந்து உறவினர்களுடன் மணமக்கள் இரவில் மதுரைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த முகமது காசிம் (வயது 48), அவருடைய மனைவி உம்ஷாமீரா (40), மகன் அப்துல்பாஜித் (14) ஆகியோர் ஒரு காரில் மதுரையில் இருந்து மண்டபம் நோக்கி சென்றனர். காரை முகமதுகாசிம் ஓட்டினார். திருப்பாச்சேத்தி கீழ்புரம் சம்பராயனேந்தல் அருகே பைபாஸ் சாலையில் சென்ற போது, எதிர்பாராத நிலையில் காரும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
அதில் கார் சேதம் அடைந்து, இடிபாடுகளுக்குள் முகமது காசிம் உள்பட 3 பேரும் சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலத்த காயமடைந்த 3 பேரும் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும், முகம்மது காசிம், அவருடைய மகன் அப்துல்பாஜித் ஆகியோர் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். உம்ஷாமீரா மானாமதுரை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேனை ஓட்டி வந்த டிரைவர் ரமேஷ் உள்பட அதில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மணமக்கள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிபடுத்தினர். விபத்து குறித்து வேன் டிரைவர் ரமேஷ் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.