கேட் திறப்பதில் மோதல்: அ.தி.மு.க. எம்.பி.–ரெயில்வே ஊழியர்கள் சமரசம்
கொடைரோடு அருகே கேட் திறப்பதில் திண்டுக்கல் அ.தி.மு.க. எம்.பி., ரெயில்வே ஊழியர் மோதிக்கொண்ட நிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் 2 பேரும் சமரசம் பேசினர்.
மதுரை,
திண்டுக்கல் எம்.பி.யாக இருப்பவர் உதயகுமார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்றுமுன்தினம் இவர் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை காரில் சென்று கொண்டிருந்தார். கொடைரோடு அருகே அழகம்பட்டி ரெயில்வே கேட் அருகே அவர் வந்தபோது, ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அதன் அருகே உதயகுமார் எம்.பி. காரை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அங்கு கொடைரோட்டை சேர்ந்த கேட் கீப்பர் மணிமாறன் (வயது 25) பணியில் இருந்தார்.
ஆனால் ரெயில் சென்ற பிறகும் அவர் கேட்டை திறக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காரை விட்டு இறங்கிய உதயகுமார் எம்.பி., மணிமாறனை சத்தம்போட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் 2 பேரும் மோதிக்கொண்டனர். மேலும் 2 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் கேட் கீப்பர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மணிமாறனை, உதயகுமார் எம்.பி. சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மேலாளர் நீனு இட்டியேரா, ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இருதரப்பையும் சேர்ந்தவர்கள் சமரசம் பேசி வருத்தம் தெரிவித்து கொண்டனர்.
பின்னர் வெளியே வந்த உதயகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, ரெயில்வே அதிகாரிகள், தொழில் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் சமரசம் செய்து கொண்டோம். மேலும் இதுதரப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களும் திரும்ப பெறப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டது என்றார்.
மணிமாறன் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டதன் பேரில் நான் கொடுத்த புகாரை திரும்ப பெறுகிறேன். அவரும், என் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார் என்றார்.