கைதி மர்ம சாவு: பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை


கைதி மர்ம சாவு: பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை
x
தினத்தந்தி 4 Dec 2018 5:35 AM IST (Updated: 4 Dec 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

பாகூர்,

பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கரிக்கன் நகரை சேர்ந்த வாலிபர் ஜெயமூர்த்தியை, பாகூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை புதுவை ஜெயிலில் அடைத்தனர்.

அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கடந்த 27–ந் தேதி கைதி கரிக்கன் மரணமடைந்தார்.

கரிக்கனை பாகூர் போலீசார் அவரை அடித்ததால்தான் அவர் இறந்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த பிரச்சினையில் பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு சரண்யா இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 1–ந் தேதி அவர் காலாப்பட்டு ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்றுக்காலை மாஜிஸ்திரேட்டு சரண்யா பாகூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

போலீஸ் நிலைய வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததை பார்த்த மாஜிஸ்திரேட்டு அது செயல்பாட்டில் உள்ளதா? என்று போலீசாரிடம் விசாரித்தார். அப்போது சில போலீசார் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என்றனர்.

போலீஸ் நிலையம் எதிரே உள்ள பாகூர் மூலநாதர் கோவிலில் கண்காணிப்பு கேமரா இருந்தது. அந்த கேமரா செயல்படுகிறதா? என்றும் விசாரித்தார். அப்போது அந்த கேமராவும் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

போலீஸ் நிலைய 2–ம் நிலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரனிடமும், மற்ற போலீசாரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது கைதி கரிக்கன் கைது தொடர்பான பல்வேறு கோப்புகளை மாஜிஸ்திரேட்டு கேட்டார். அதற்கு உயர் அதிகாரிகள் அந்த கோப்புகளை எடுத்து சென்றுவிட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்தபோது போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரஹீம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடமும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.


Next Story