கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது; 8 பவுன் நகை– மொபட் மீட்பு
கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, ஒரு மொபட்டை மீட்டார்கள்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள குட்டிபாளையம், கோம்பு தோட்டத்தை சேர்ந்தவர் பூபதி. இவருடைய வீட்டில் கடந்த மாதம் 25–ந்தேதி திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பூபதி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
அன்றைய தினமே அதே பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று ஒரு பவுன் தங்க மோதிரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல் கடந்த ஜூலை மாதம் 12–ந் தேதி கவுந்தப்பாடி சந்தை அருகில் பரிமளம் என்பவர் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருட்டு போனது.
இந்த சம்பவங்கள் குறித்து கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின் பேரில், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரில் ஒரு சினிமா தியேட்டர் முன்பு வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சந்தேகப்படும் வகையில் மொபட்டில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் பேசினார். அதனால், அவரை கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் (வயது 22) என்பது தெரிய வந்தது. மேலும் பூபதி, கஸ்தூரி வீட்டில் நகைகள் திருடியதையும், பரிமளத்தின் மொபட்டை திருடியதையும் அசாரூதீன் ஒப்புக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார் அசாரூதீனை கைது செய்து, அவரிடமிருந்து 2 பவுன் நகை மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கோபியை அடுத்த கெட்டிச்செவியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தில் கடந்த மாதம் 19–ந் தேதி மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கணினி மற்றும் மின்சார அடுப்பை திருடிச்சென்று விட்டார்கள்.
இதேபோல் கடந்த 30–ந் தேதி ஊஞ்சப்பாளையம் எரங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த கடத்தூர் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் அக்கரை கொடிவேரி பகுதியில் போலீசார் ரோந்து சென்றார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நடமாடிய 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது அவர்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த வேலு (56), மற்றொருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சு.புதுப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (29) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள்தான் பூங்கொடியின் வீட்டில் 6 பவுன் நகையையும், கெட்டிச்செவியூர் அரசு பள்ளியில் கணிணிகளையும் திருடியது என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தூர் போலீசார் வேலு மற்றும் சீனிவாசனை கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையும் மீட்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
கோபி பகுதியில் நடந்த தொடர் திருட்டு வழக்குகளில் கைது செய்யபட்ட அசாருதீன், வேலு, சீனிவாசன் 3 பேரும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்கள்.