வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி
வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டு, அவர்களை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் நிர்மலாதேவி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேருக்கும் இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் 3 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் மீது விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்றும் அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இதற்காக நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிய 3 பேரின் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மாணவிகளிடம் பாலியல் பேரம் குறித்த வழக்கில் அவர்கள் மீது வருகிற 11–ந் தேதி முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக நிருபர்களிடம் பேராசிரியர் முருகன் கூறும் போது, நீதித்துறைக்கு தலை வணங்குவதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி. நான் இவ்வளவு நாள் சிறையில் இருப்பது ஏன்? என எனக்கே தெரியவில்லை“ என்று தெரிவித்தார்.