பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் போலீஸ் விசாரணை அறிக்கை பெற வாய்ப்பு; ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவைப்படும் போலீஸ் விசாரணை சான்று அறிக்கையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
தற்போதுள்ள நடைமுறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் நீதித்துறை மூலம் பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பற்றியும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் பற்றியும் போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்பே அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதும், பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தனி நபரோ, தனியார் நிறுவனங்களோ தங்களுக்கு தேவைப்படும் நபர் பற்றியோ, நிறுவனங்கள் பற்றியோ விசாரணை அறிக்கை தேவைப்பட்டால் அதற்கென உள்ள தனியார் நிறுவனங்களையே நாட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் நபர் பற்றியோ விசாரித்து அறிக்கை பெற வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என போலீஸ் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இதற்கென தனிநபர் ரூ.500 கட்டணம் செலுத்தியும், தனியார் நிறுவனங்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தியும் ஆன்லைனில் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களில் விசாரணை சான்று அறிக்கை விண்ணப்பித்த நபருக்கு வழங்கப்படும்.
இந்த நடைமுறையை செயல்படுத்த மாவட்ட குற்றவியல் ஆவண பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். இதனை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த தகவலை போலீஸ் டி.ஜி.பி., மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு சிற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.