மாவட்ட செய்திகள்

புகைப்பட ஆதாரம் இல்லை என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Although there is no photo source Relief supplies should be given to storm affected people

புகைப்பட ஆதாரம் இல்லை என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

புகைப்பட ஆதாரம் இல்லை என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
புகைப்பட ஆதாரம் இல்லை என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில், ‘கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கும், இடைக்கால நிவாரணம் வழங்குவதை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல், மத்திய அரசு வக்கீல் சுப்பையா ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில், “ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவின் இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.7 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழக அரசின் கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன“ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டின் தாக்கல் செய்த அறிக்கையில், “கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சத்து 90 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதில் 80 ஆயிரம் மின்கம்பங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மற்றவை சரிசெய்யப்பட்டுவிட்டன. வெளிமாநில, மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்களை வைத்து மின் சேவையை சரிசெய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மின் வினியோகம் முழுமையாக வழங்கப்படும். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் சார்பில் “புயலால் 2.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், உடைகள் என நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பின்படி 50 ஆயிரம் பேர் பாதித்துள்ளதாக கூறி, கூடுதலாக உள்ள நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். புயல் பாதித்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் பெரும்பாலான இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிந்துள்ளன.

இந்தநிலையில் பலரிடம் புயல் பாதிப்புக்கான புகைப்பட ஆதாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்கிறார்கள். அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பெரும்பாலான மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே முந்தைய கணக்கீட்டின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். அந்த பொருட்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்“ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் சேதம் தொடர்பான புகைப்பட ஆதாரம் இல்லை என்பதற்காக நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக்கூடாது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும்“ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 12–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீலை தாக்கியவருக்கு சரமாரி அடி, உதை
மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீலை தாக்கியவரை வக்கீல்கள் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மும்பை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்குவதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்த அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
3. தேர்தல் செலவை வசூலிக்கக்கோரிய வழக்கு: 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
4. அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகர் வந்து செல்ல வேண்டும்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. கிராம நிர்வாக அலுவலர்களை பதவி இறக்கம் செய்ய ஐகோர்ட்டு தடை
கிராம நிர்வாக அலுவலர்களை பதவி இறக்கம் செய்த உத்தரவை அமல்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.