திருப்பூர், பல்லடம் பகுதியில் ரூ.99¼ கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் - பணிகளை விரைவில் தொடங்க ஏற்பாடு


திருப்பூர், பல்லடம் பகுதியில் ரூ.99¼ கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் - பணிகளை விரைவில் தொடங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 10:13 PM GMT)

திருப்பூர், பல்லடம் பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.99¼ கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பணிகள் விரைவில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் ஒன்றிய பகுதி மற்றும் பல்லடம் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன்பயனாக திருப்பூர், பல்லடம் ஒன்றியத்துக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகள், பல்லடம் ஒன்றியத்தில் கணபதிபாளையம், கரைப்புதூர், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளில் அதிகப்படியான மக்கள் தொகை காணப்படுகிறது. இந்த 6 ஊராட்சிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.99 கோடியே 24 லட்சத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2050-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நபார்டு வங்கி உதவியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

நபார்டு வங்கி சார்பில் ரூ.82 கோடியே 52 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.16 கோடியே 72 லட்சமும் என ரூ.99 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story