செல்லாண்டிபாளையம்- சுங்ககேட் கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை


செல்லாண்டிபாளையம்- சுங்ககேட் கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2018 4:30 AM IST (Updated: 7 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உள்ள செல்லாண்டிபாளையம் முதல் சுங்ககேட் வரை செல்லும் பாசன கிளை வாய்க் காலில் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

கரூர்,

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் திருமாநிலையூர் ராஜவாய்க்கால், பெரியாண்டாங்கோவில்-பாலம்மாள்புரம் வரை செல்லும் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செல்லாண்டிபாளையம் அமராவதி ஆறு அருகே செல்லும் கிளை வாய்க்காலில் அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால், விவசாய பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அமராவதி வடிநில பிரிவின் பொறியாளர் ராஜகோபால், உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை யினர் ஆகியோர் செல்லாண்டிபாளையத்தில் இருந்து ராயனூர் வழியாக சுங்ககேட் பகுதியில் சென்று முடிவடையும் பாசன கிளை வாய்க்காலை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடுகளின் எல்லையை விரிவாக்கம் செய்து சுற்றுச்சுவர் கட்டியும், சாலை மற்றும் சிறிய பாலங்கள் அமைத்தும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் அளித்து ஆக்கிரமிப்பை அகற்றப் போவதாக கூறினர். இதனால் சிறிது நேரம் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது. இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க முன் எச்சரிக்கையாக பசுபதிபாளையம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், செல்லாண்டிபாளையம் கிளை வாய்க் காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டு சுற்றுச் சுவர்கள் உள்ளிட்டவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும் வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக தூர்வாரப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 சிறிய பாலங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள் சங்கத்தினர், இதேபோல் கரூரில் உள்ள பல்வேறு வாய்க்கால்களையும் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிற்சாலை கழிவுநீர் உள்ளிட்டவை ஆறு, வாய்க்காலில் கலக்கிறதா? என்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story