கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை


கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 8 Dec 2018 4:15 AM IST (Updated: 8 Dec 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோபி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடமும், அவர்களது உறவினர்களிடமும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கோபி அரசு ஆஸ்பத்திரியிலும் திடீர் சோதனை நடைபெற்றது. ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமையில் போலீசார் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி ஆனந்தன் அறைக்கு சென்றனர்.

அங்கு ஆனந்தனிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் மொத்த மருந்துகள் இருப்பு வைக்கப்படும் அறைக்கு சென்று மருந்துகள் இருப்பு குறித்து சோதனை செய்தனர். அதன்பின்னர் பச்சிளங் குழந்தைகள் அறை, கண் மருத்துவ பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அறை, ஸ்கேன் செய்யும் அறை என ஒவ்வொரு அறைகளாக சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகளிடம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? தரக்குறைவாக நடத்துகிறார்களா?, யாராவது லஞ்சம் கேட்கிறார்களா? என்றும் கேட்டனர்.

இந்த சோதனையின்போது ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருந்து யாரையும் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. அதே நேரம் நோயாளிகள் வழக்கம்போல் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1000 கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.


Next Story