கைதிகளுக்கு பாடம் நடத்த சென்றவரின் கள்ளத்தனம்: மதுரை சிறையில் செல்போன் விற்ற ஆசிரியர் கைது
மதுரை சிறை கைதிகளுக்கு பாடம் நடத்த சென்ற ஆசிரியர் கள்ளத்தனமாக சிறையில் செல்போன் விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை,
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் திருட்டுத்தனமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைக்குள் செல்போன், கஞ்சா போன்ற பொருட்கள் கைதிகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது சிறை அதிகாரிகளுக்கு புரியாத புதிராக இருந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை மத்திய சிறை முழுவதும் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது கைதிகள் அழகிரி, அருண்பிரபு, பார்த்திபன் ஆகியோர் தங்கியிருந்த அறையில் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கரிமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சிறைக்குள் அந்த கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அதில், சிறை கைதிகளுக்கு பாடம் கற்பிக்க வந்த ஆசிரியர் ஒருவர்தான் கள்ளத்தனமாக செல்போனை எடுத்து வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியரை பிடித்து விசாரித்தனர். அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இந்திரா நகரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 31) என்பதும், இவர் கடந்த 2017–ம் ஆண்டு சிறையில் இடைநிலை ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.
அவர் 3 செல்போன்களை உள்ளாடையில் மறைத்து சிறைக்குள் கொண்டு சென்று கைதிகளுக்கு விற்றுள்ளார். இதற்காக அவர் ஒரு செல்போனுக்கு ரூ.5 ஆயிரம் வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.