எஸ்.பி.பட்டினத்தில் ஆம்னி பஸ்சில் சிக்கிய ரூ.62¼ லட்சம், ஒருவர் கைது
எஸ்.பி.பட்டினத்தில் நடந்த அதிரடி சோதனையின் போது ஆம்னி பஸ்சில் எடுத்து வந்த ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின் பேரில் தொண்டி சுங்கத்துறை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் தர்மேந்தர்சிங், அதிகாரிகள் ஆல்பர்ட், ரமேஷ், சேக்மைதீன், கருணாகரன் ஆகியோர் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் பஸ்சுக்குள் இருந்த பேக் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதைக்கண்டதும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து அந்த பேக்கை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அந்த பணத்தை எடுத்து வந்த நபரையும் பிடித்து தொண்டியில் உள்ள சுங்க அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அந்த நபர் தொண்டி மரைக்காயர் தெருவை சேர்ந்த அப்துல் ரவூப் (வயது 50) என்பதும், இவர் சென்னையில் கடை ஒன்றில் வேலை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பேக்கில் இருந்து 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மொத்தம் ரூ.62 லட்சத்து 25 ஆயிரத்து 200 இருந்தது. இதில் பெரும்பாலானவை 2000, 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். அவருக்கு இந்த பணம் எப்படி கிடைத்தது? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவரது பதில்கள் முன்னுக்குப்பின் முரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அப்துல் ரவூப் இந்த பணத்திற்கான ஆவணங்கள் எதையும் காட்டவில்லை. இதனால் இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அப்துல் ரவூப்பை கைது செய்த சுங்கத்துறையினர் அவரையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும் மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.