அருள்வாக்கு கூறுவதாக ஓசூர் பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்: நாகர்கோவிலில் பதுங்கலா? போலீஸ் விசாரணை


அருள்வாக்கு கூறுவதாக ஓசூர் பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்: நாகர்கோவிலில் பதுங்கலா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2018 4:35 AM IST (Updated: 8 Dec 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை-பணம் பறித்து விட்டு தலைமறைவான சாமியார் நாகர்கோவிலில் பதுங்கலா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருள்வாக்கு சொல்லி வந்தார். இதை நம்பி ஒருமுறை நானும் அருள்வாக்கு கேட்க சென்றேன். அப்போது உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செய்வினையை அகற்ற வேண்டும் என்றால் நகைகளை கழற்றி எனது பூஜையறையில் உள்ள சாமி படத்துக்கு முன் வையுங்கள் என்றார்.

அதை நம்பி நானும் 5 பவுன் நகையை கழற்றி வைத்தேன். அருள்வாக்கு சொல்லிய பிறகு நகையை கேட்டபோது செய்வினை அகன்றதும் நானே தருகிறேன் என்று கூறினார். இதற்கிடையே அவசர தேவை க்காக என்னிடம் அந்த சாமியாரும், அவருடைய மனைவியும் சேர்ந்து கடன் கேட்டனர். அவர்களை நம்பிய நான் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.

இந்த நிலையில் அவர்கள் திடீரென அங்கிருந்து வீட்டை காலிசெய்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்னை போல் பல பெண்கள் அவர்களிடம் ஏமாந்துள்ளனர். எங்கள் ஊருக்கு சாமியார் வந்த போது தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். அங்கு விசாரித்தபோது, அது அவருடைய சொந்த ஊர் இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த சாமியார் நாகர்கோவிலில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.

அதனால் நாங்கள் ஓசூரில் இருந்து நாகர்கோவில் வந்தோம். இங்கு வந்த பிறகு சாமியாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களுடைய நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்த சாமியார் நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



Next Story