ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி


ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 9 Dec 2018 3:45 AM IST (Updated: 9 Dec 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே கீழ்மட்ட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்ற பொதுமக்களை ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது மாக்கினாம்பட்டி. இந்த வழியாக பொள்ளாச்சி–மதுரை அகலரெயில் பாதை செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக ரெயில்பாதையை கடந்து செல்ல கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தேங்குகின்றன.

இதுகுறித்து கடந்த மாதம் ஆய்வு செய்த அமைச்சர், எம்.பி. ஆகியோர் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை தடுக்க தற்காலிமாக குழாய் அமைக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் ஒரு மாதமாகியும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக ரெயில்வே பாலம் பகுதியில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்த பாதையை மாக்கினாம்பட்டி, ஜோதிநகர், நாட்டுக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீர் தேங்கி நிற்பதாலும், சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ–மாணவிகள் தவறி விழுந்து விடுகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 6 பேர் வரை கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர். எனவே குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கவில்லை என்றால் மறியலில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு அதிகாரிகள் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழாய் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக மாக்கினாம்பட்டியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.


Next Story